Saturday, August 8, 2015

Keerthivasan

இதுதான் இந்துமதம் – 12

இதுதான் இந்துமதம் – 12

சிலர் இறைவன் அருவமாக உள்ளான் என பேசுகிறார்கள். வேறு சிலர் இல்லை இறைவனுக்கு இந்த குறிப்பிட்ட உருவம்தான் உள்ளது என்கிறார்கள். இறைவன் ஏழு வானத்தின் மேல் இருக்கிறார் என்கிறார்கள் சிலர். இறைவன் மரக்கட்டையில் மட்டுமே இருக்கிறான் என்கிறார்கள் சிலர். இப்படி இங்கு அங்கு என குறிப்பிடமுடியாத இறைவனை சின்னஞ்சிறு வட்டத்திற்குள் சிறையிட முயல்கிறார்கள் சிறு புத்தியாளர்கள். ஐந்து குருடர்கள் யானையை தொட்டு அவரவர் உணர்வ‌தை சாதிப்பதை போல் இவர்கள் சாதிக்கிறார்கள்.

அருவம் உருவம் என வரையறுக்க இயலாத இறைவனை, காரண அறிவால் கண்டு அறிய‌ முடியாத இறைவனை எப்படி நாம் இப்படி சுருக்க முடியும் ? ஒரு சிறு கூண்டுக்குள் அடைக்க முடியும் ?

இந்து மதம் இறைவனின் அளப்பறிய ஆற்றலை விளக்குகிறது. உபநிஷத்துகள் அவனின் பேராற்றலை விரிவாக விளக்குகின்றன. நம் புலன்களும், மனமும் புத்தியும் எத்தனை அற்பமான‌வை என்பதை தெளிவுபடுத்துகின்றன.

அளப்பறிய ஆற்றல் கொண்ட இறைவனை அற்பமான நம் மனம் எப்படி அறிந்து கொள்ளும் ?

ஒரு கல்லில் சிலை வடிக்கப்படுகிறது. அச்சிலையில் இறைவனின் அற்புத குணங்கள் சித்தரிக்கப்படுகின்றன. இறைவ‌னின் காக்கும் தன்மை, தீமைகளை அழிக்கும் தன்மை, அழிவற்ற தன்மை, அனைத்திற்கும் ஆதாரமாக இருக்கும் தன்மை என பலவகையில் உருவகப்படுத்தப் படுகிறது.

"ஓ இறைவா, நீ அளவற்ற ஆற்றல் புரிந்தவன், உன்னை என் சிற்றறிவால் அறிய முடியாது, ஆகையால் இந்த சிலையில் இறங்கி வா, என் மனம் உன் மேல் லயிப்பதற்கு ஒரு ஊடகமாய் இந்த சிலையில் இறங்கி அருள் புரி" என ஒரு இந்து அடிபணிந்து கேட்கிறான். இதுதான் "ஆவாஹனம்" எனப்படுகிறது. ஒரு சிலையில் இறை சக்தி இத்தகைய ஆழமான பிரார்தனைகளாலும், உயர் பொருள் கொண்ட மந்திரங்களாலும்தான் ஏற்ற‌ப்படுகிறது. இப்படி இறை சக்தியை ஏற்றும் சக்தி வாய்ந்த வழிமுறைகளாக "ஆகம விதிகள்" திகழ்கின்றன.

இறைவனுக்கு கோவில்கள் அவசியம் இல்லை, மனிதர்களுக்காகதான் கோவில். எண்ணிலடங்காத அண்டங்களை தாங்கும் இறைவனுக்கு கோவில்கள் எதற்கு ? சிலைகள் எதற்கு ? வழிபாடுகள்தான் எதற்கு ? அற்ப மானிடர்களான நாம் நம் மனதை இறைவன் வசம் செலுத்த‌ அல்லவா இவை தேவைப்படுகின்றன ? எனக்கு இறைவனை தெரியும் அவன் அருவமானவன் என்கிற அகங்காரம் இங்கு இல்லை. எனக்கு இறைவன் இப்படிப்பட்ட உருவம் கொண்டவன் என்பது தெரியும் என்கிற அறிவீனமும் இங்கு இல்லை. பணிவே இந்து மதம் போதிக்கும் பக்தி யோகத்தின் படிகல்லாக இருக்கிறது. அடுத்த பகுதியில் மேலும் பார்ப்போம்.

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :